Share via:
மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சிம்சன் குழுமத்தின் சார்பில் ரூ.1.25 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உலுக்கி எடுத்த மிக்ஜாம் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர், மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக காசோலைகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று (டிச.14) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் சிம்சன் குழுமத்தின் அமால்கமேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஏ.கிருஷ்ணமூர்த்தி சந்தித்தார். அப்போது மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1.25 கோடிக்கான காசோலையை வழங்கினார். இந்த சந்திப்பின் போது தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சிம்சன் நிறுவனத்தின் பொது மேலாளர் ரவிசர்மா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதேபோல் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு மாநில கிளைத் தலைவர் டாக்டர் கே.எம்.அபுல் அசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது நிக்ஜாம் புயல் பேரிடர் பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார். அப்போது இந்திய மருத்துவ சங்கத்தின் செயலாளர் டாக்டர் எஸ்.கார்த்திக் பிரபு, நிதி செயலாளர் டாக்டர் எஸ்.கவுரி சங்கர், முன்னாள் தலைவர் டாக்டர் டி.செந்தமிழ் பாரி, முன்னாள செயலாளர் என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன் மற்றும் டாக்டர் செங்குட்டவன் உள்ளிட்டோர் இருந்தனர். மேலும் கனிமொழி சோமு எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தனர்.
ஜி.ஆர்.டி.ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர்கள் ஜி.ஆர்.அனந்த பத்மநாபன், ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்கள். இந்த சந்திப்பின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மேலும் சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமை செயலகத்தில் சந்தித்து மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத சம்பளமான ரூ.1.05 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். இந்த சந்திப்பின் போது தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உடன் இருந்தார்.