Share via:
அகில இந்திய சிலம்பரசன் டி.ஆர். ரசிகர் மன்றம் சார்பாக மிக்ஜாம் புயல் மழை தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் வழங்கினார்.
வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த (டிசம்பர்) 3 மற்றும்4 ஆகிய தேதிகளில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டது. தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் மக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்து பல்வேறு சேதங்கள் ஏற்படுத்தியது. மழைநீரில் வீட்டு உபயோகப் பொருட்கள், பள்ளி மாணவர்களின் புத்தகங்கள், சான்றிதழ்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை மழைநீரில் சேதமானது. இதைத்தொடர்ந்து பல பகுதிகளில் பல்வேறு தரப்பினர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் அகில இந்திய சிலம்பரசன் டி.ஆர்.ரசிகர் மன்றம் சார்பாக ஆர்.கே.நகர், எழில் நகர், எச்.6 காவல்நிலையம் அருகில் வாழும் மக்களுக்கு நிவாரண உதவிகளை இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் வழங்கினார். அப்பகுதி மக்கள் வரிசையில் நின்று நிவாரண உதவிகளை மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர்.
இதனை தொடர்ந்து டி.ராஜேந்தர் செய்தியாளர்கள் முன்பு ஆவேசமாக பேசினார். அவர் பேசும்போது, ‘‘நான் போஸ் கொடுப்பதற்காக வரவில்லை. மக்கள் கொட்டும் மழையில் எப்படியெல்லாம் வாடியிருப்பார்கள்? அவர்களின் வண்டி, பைக், ஆட்டோ உள்ளிட்டவற்றை இழந்திருப்பார்கள். மேலும் பலர் இ.எம்.ஐ. கட்ட முடியாமல் வாடியிருப்பார்கள் என்று நினைத்த போது என் மனது பதைபதைத்தது. உடல்நிலை சரியில்லை என்பதால் எனது தம்பி வாசுவை வைத்து நிவாரண உதவிகளை வழங்கியிருக்கலாம். ஆனால் நான் ஏன் வந்தேன்? என் மக்களை பார்த்ததால் என் மனது நிறைந்துள்ளது. ஏனென்றால் நான் ஒரு காலத்தில் முன்னால் இந்த தொகுதியே கிடையாது. பூங்காநகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக நான் இருந்த போது, கொட்டும் மழையில் மாரளவு தண்ணீரில் நீந்திக் கொண்டும் குப்பை லாரியில் ஏறியும் கூட நான் நிவாரண உதவிகளை செய்தேன்’’ என்று தெரிவித்தார்.

