Share via:
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த சண்முகராஜ் என்பவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சிவகாசி அருகே வெம்பக்கோட்டை ஒன்றியம் பனையடிப்பட்டி கிராமத்தில் ஜெயபால் என்பவர், ஜெயதர்ஷினி என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். உரிமத்துடன் செயல்பட்டு வரும் இந்த பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் உட்கடை கண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான சண்முகராஜ் என்பவர் முதல் ஆளாக ஆலைக்கு வேலைக்கு சென்றுள்ளார். வழக்கம் போல் பணிகளை தொடங்கிய போது எதிர்பாராத விதமாக குழாய்களுக்கு செலுத்திக் கொண்டிருந்த மருந்துகளில் உராய்வு ஏற்பட்டு வெடித்து சிதறியது. இதனால் அந்த குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் ஒன்றாக வெடித்து சிதறியதில் கட்டிடம் தரைமட்டமானது.
இதில் சண்முகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து சென்ற ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு போலீசார் போராடி தீயை அணைத்து, சண்முகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி சண்முகராஜ் என்பவர் உயிரிழந்த துயரமான செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயிரிழந்த சண்முகராஜின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்’’ என்று தெரிவித்திருந்தார்.