Share via:
வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றதாகக் கூறப்பட்ட விஜயகாந்த் உடல்நிலை திடீரென சிக்கலானது. இதையடுத்து ஒட்டுமொத்த தமிழக மக்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். முக்கிய பிரமுகர்கள் மருத்துவமனைக்கே சென்று பார்த்து வந்தார்கள். விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டும் என்று அத்தனை பேரும் பிரார்த்தனை செய்தார்கள்.
ஒருவழியாக இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் விஜயகாந்த் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்குத் திரும்பினார். விஜயகாந்த் பூரண நலம் அடைந்துவிட்டார் என்று மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பு, அவரது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் கொஞ்சம் நிம்மதி கொடுத்தது.
ஆனால், அதற்குள்ளாக விஜயகாந்த்தை பொதுவெளியில் காட்டி சித்ரவதை செய்வதை மீண்டும் பிரேமலதா தொடங்கிவிட்டார் என்று தே.மு.தி.க. கட்சியினரே வேதனைப்படுகிறார்கள்.
டிசம்பர் 14ம் தேதி தே.மு.தி.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், இந்த கூட்டத்தில் விஜயகாந்தும் கலந்துகொள்வார் என்று அறிவித்திருப்பதுதான் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
விஜயகாந்த் ஓரளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறார் என்று பிற கட்சியினர் நம்பும் வகையில் பொதுவெளியில் காட்சியளிக்க வைத்தால் மட்டுமே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கும் என்று பிரேமலதா நினைக்கிறாராம். அதற்காகவே இந்த விஜயகாந்த் காட்சி நாடகம் நடத்தப்பட இருப்பதாகத் தெரிகிறது.
விஜயகாந்தை நிம்மதியா ரெஸ்ட் எடுக்க விடுங்கம்மா என்பதுதான் ரசிகர்களின் குரல். இதற்கு பிரேமலதா செவி சாய்ப்பாரா..?