Share via:
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண நிதியாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில் இத்தொகை 3 தவணைகளாக வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் அதிகனமழை பொழிந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பொது மக்களின் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தது. பலர் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்த நிலையில் மீட்புப்படையினரால் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து நிக்ஜாம் புயல் பேரிடரால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரண நிதியாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதைத்தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிவாரணத் தொகையானது இன்னும் ஒரு வாரத்தில் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
வருகிற 16ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் நிவாரண தொகைக்கான டோக்கன் கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த நிவாரணத் தொகையாக 6 ஆயிரம் ரூபாய் 3 தவணைகளாக கொடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், உடனடியாக நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், 3 தவணையாக கொடுக்கப்படும் என்ற அதிகாரப்பூர்வமற்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.