Share via:
தமிழகத்தில் புதிதாக 9.13 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களுக்காக கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார விடுமுறை நாட்களில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதுபோன்று நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் இதுவரை மொத்தம் 9.13 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது, ‘‘கடந்த அக்டோபர் 27ம் தேதி தொடங்கப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் கடந்த 4, 5, 25, 26 ஆகிய நாட்களிலும் சிறப்பு முகாம்கள் மூலம் தொடர்ந்து நடைபெற்றன. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.26) வரையிலான ஒரு மாத காலத்தில் மட்டும் 9லட்சத்து 13 ஆயிரத்து 535 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். அதேபோல் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 46 மனுக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கவும், 4 லட்சத்து 99 ஆயிரத்து 302 பேர் திருத்தங்கள் மேற்கொள்ளவும் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல் பெயர் சேர்ப்பு, நீக்கல், திருத்தங்கள் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ள கடந்த மாதத்தில் மொத்தம் 15 லட்சத்து 33 ஆயிரத்து 955 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று சத்யபிரதாசாகு தெரிவித்துள்ளார்.
வருகிற 12ம் தேதி வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 26ம் தேதி வரை விண்ணப்பிங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிற ஜனவரி 5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.