Share via:
தங்கள் சார்பில் கேள்வி எழுப்புவதற்காகத்தான் எம்.பி.க்களை மக்கள்
தேர்வு செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள். நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து
கேள்வி எழுப்பக்கூடாது என்பதற்காக ஒரே நாளில் 81 எம்.பி.க்களை சஸ்பெண்ட் நடவடிக்கை
எடுத்துள்ளது பா.ஜ.க. அரசு.
’நாடாளுமன்றத்தில் இப்படியொரு அராஜகம் எப்போதும் நிகழ்ந்ததில்லை.
இந்த நாட்டின் பாதுகாப்பிற்காக போராடுவதுதான் நாங்கள் செய்த குற்றம். மோடி அரசு இந்தியா
கூட்டணி கட்சிகளை அச்சுறுத்தி பணியவைக்கலாம் என்று நினைக்கிறது. அது ஒருபோதும் நடக்காது.
நாடாளுமன்றத்தில் இருந்து இன்று நீங்கள் எங்களை நீக்கலாம். நாங்கள் உங்களை நீக்கும்
காலம் வெகுதூரத்தில் இல்லை…’ என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஜோதிமணி கொதிப்பாக
பதிவு போட்டுள்ளார்.
அதேநேரம் திருமுருகன் காந்தி, மத்திய அரசு எதிர்க்கட்சி எம்.பி.க்களை
வெளியே அனுப்பிவிட்டு அவசரம் அவசரமாக சில சட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
அவரது பதிவில், ‘எதிர்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்துவிட்டு
திருடர்களைப் போல் 7 மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. ராஜ்யசபாவில் 2 முக்கிய மசோதாக்களான
ஜம்மு&காஷ்மீர் திருத்த மசோதா, யூனியன் பிரதேச மசோதா ஆகியவற்றை 14 நிமிடங்களில்
நிறைவேற்றியிருக்கிறது.
தபால் அலுவலக மாற்ற மசோதாவை அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளது.
இதன்படி, தபாலில் அனுப்பப்படும் எந்த கடிதத்தையும் பிரித்து படிக்க அஞ்சலக அதிகாரி
முதல் ஒன்றிய அரசியல்வாதிகள் வரை உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று மற்றொரு செய்தியும்
ராஜ்யசபாவில் கேள்விக்கு பதிலாக பாஜக கொடுத்துள்ளது. அதில் மோடி ஆட்சியில், ஒன்றிய
அரசின் திட்டங்கள் கிட்டதட்ட 800க்கும் அதிகமானவை நிறைவேறுவதில் தாமதமாகி உள்ளது, மேலும்
411 திட்டங்கள் கூடுதல் நிதி சுமையை ஏற்படுத்தியுள்ளது இதனால், நிதி சுமையாக கிட்டதட்ட
ரூ4 லட்சத்து31,000 கோடி அதிகமாகியுள்ளது.
பேரிடர் மேலாண்மைக்காக மோடி அரசு இந்தி பேசும் வட மாநிலங்களுக்கு
பெரும் தொகையை ஒதுக்கியுள்ளது. மராட்டியத்திற்கு ரூ19,000 கோடியும், உத்திர பிரதேசத்திற்கு
ரூ11,000 கோடியும், தமிழகத்திற்கு 6000 கோடியுமாக ஒதுக்கியுள்ளார்க்ள். இப்படியான பேரிடர்
மேலாண்மைக்கான நிதியில் வஞ்சிக்கிறது பாஜக. மேலும், பேரிடர் உதவித்தொகையை கொடுக்க மறுக்கிறது’
என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கோஷம் எழுப்பிவரும் பா.ஜ.க. நாடாளுமன்றத்தில்
ஒரே கட்சி மட்டுமே இருக்கவேண்டும் என்று எண்ணுவதாகத் தெரிகிறது.
இதுதான் ஜனநாயகமா என்பதை பிரதமர்தான் சொல்ல வேண்டும்..!