Share via:
குஷ்பு மன்னிப்பு கேட்கும் வரை ஓயுமாட்டோம் என்று பட்டியலினத்தைச் சேர்ந்த 500 பெண்கள் நாளை நடிகை குஷ்புவின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
நடிகை திரிஷா, மன்சூர் அலிகான் விவகாரத்தில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குரல் கொடுக்காதது ஏன் என்று நெட்டீசன் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதில் அளித்த நடிகை குஷ்பு, ‘சேரி’ என்ற வார்த்தையை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சேரி என்ற வார்த்தைக்கு குஷ்பு அர்த்தம் தெரிவித்த போதும் இந்த பிரச்சினை தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
இதை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் கட்சி, குஷ்பு வீட்டை நாளை (நவ.28) முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர். இது குறித்து எஸ்.சி.துறை மாநில தலைவர் ரஞ்சன்குமார் கூறும்போது, ‘‘நாளை (நவ.28) நடிகை குஷ்புவின் வீட்டை 500க்கும் மேற்பட்ட குடிசைப்பகுதிக பெண்களுடன் சேர்ந்து முற்றுகையிடுவோம். சேரி என்பது இழிவானது அல்ல என்பதை ஒப்புக்கொண்டாலும், அந்த வார்த்தையை ஏன் குஷ்பு பயன்படுத்த வேண்டும். அவர் மன்னிப்புக் கேட்கும் வரை நாங்கள் ஓயப் போவதில்லை.
தான் மன்னிப்புக் கேட்கப்போவதில்லை என்று அவர் ஆவணமாக பேசி இருக்கிறார். தவறான கருத்துகளை சொல்லிவிட்டு பின்னர் மன்னிப்பு கேட்ட வரலாறு உண்டு என்பதை அவர் மறந்துவிடக்கூடாது. மேலும் குஷ்பு மீது வழக்கு தொடருவது குறித்தும் இன்று வக்கீல்களுடன் ஆலோசிக்க இருக்கிறோம். அவர் மீது விரைவில் வழக்கு தொடருவோம்’’ என்று தெரிவித்தார்.
இன்று (நவ.27) அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் என்பதாலும், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு விழா ஆகிய 2 பெரிய நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் தங்கள் போராட்டத்தை நாளைக்கு தள்ளிவைத்துள்ளோம் என்று ரஞ்சன்குமார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது