Share via:
லிவ் இன் உறவில் இருந்த காதலியை 50 துண்டுகளாக வெட்டி அவற்றை காட்டில் உள்ள விலங்குகளுக்கு இரையாக்கிய கொடுமை ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
திருமணம் செய்து கொள்வதற்கான ஒத்திகை என்ற பெயரிலும், புரிதலுக்கான காலக்கெடு என்ற பெயரிலும், திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை என்ற முற்போக்குவாதிகள் என்ற அடையாளத்திலும் இருக்கும் இளம்வயதினர் சிலர் லிவ் இன் உறவில் இருந்து வருகிறார்கள். இவர்களில் சிலர் திருமணம் செய்து கொள்கிறார்கள். பலர் உறவு சலித்துப் போய் பிரிந்து விடுகிறார்கள்.
ஜார்க்கண்ட் மாநிலம் குந்து மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த நரேஷ் பெங்கிரா என்ற 25 வயது இளைஞர் தமிழகத்தில் இறைச்சி வெட்டும் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் ஜார்க்கண்ட்டில் வாழ்ந்துவந்த இளம் பெண் ஒருவருடன் லிவ் இன் உறவில் இருந்து வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் உறவில் இருந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு பிறகு ஜார்கண்ட் சென்ற நரேஷ் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இது பத்தி எதுவும் அறியாத அந்த இளம்பெண், நரேஷிடம் சொந்த ஊர் சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று நரேஷை நச்சரித்துள்ளார். இதனால் காதலியை ராஞ்சியில் உள்ள ஜோர்டாக் கிராமத்திற்கு அழைத்துச் சென்ற நரேஷ், அவரை பலாத்காரம் செய்து துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் தான் மறைத்து எடுத்து வந்த கூர்மையான ஆயுதங்களால் காதலியை 50 துண்டுகளாக வெட்டியுள்ளார். பின்னர் அவற்றை வனவிலங்குகளுக்கு இரையாக வீசிச்சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பிய அவர் எதுவும் நடக்காதது போல் மனைவியுடன் குடும்பம் நடத்தியுள்ளார்.
எதிர்பாராத விதமாக அப்பகுதி நாய் ஒன்று, அப்பெண்ணின் கையை கவ்விக் கொண்டு சுற்றித் திரிந்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து இது குறித்து போலீசில் தெரிவித்ததும் நரேஷ் செய்த குற்றம் வெளிச்சத்திற்கு வந்தது. இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செய்திகளை வாசிக்கும் போது மக்கள் மனம் எப்படியெல்லாம் பதறிப்போகும் என்று மனநல ஆலோசகர்கள் வருத்தம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.