Share via:
ஒலிம்பிக்கில் 50 கிலோ மல்யுத்தப் பிரிவில் ஒரே நாளில் 3 முன்னணி
வீராங்கனைகளை அடுத்தடுத்து வீழ்த்திய வினேஷ் போகாட் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.
மறுநாள் இறுதிப்போட்டி தினத்தில் எடை பரிசோதனை செய்யப்பட்ட போது, வினேஷ் போகாட் அனுமதிக்கப்பட்ட
அளவைக் காட்டிலும் 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
வெள்ளிப்பதக்கத்தைப் பெறுவதற்கு நடுவர் மன்றத்தில் முறையீடு செய்திருந்தார். அந்த முயற்சியும்
தோல்வியைத் தழுவியதால் வெறும் கையுடன் நாடு திரும்பினார் வினேஷ் போகத்.
தங்கப் பதக்கம் பெறவில்லை என்றாலும் இந்திய மக்கள் மனதை வென்றுவிட்டார்
என்பதை காட்டும் வகையில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் மல்யுத்த வீரர்கள் சாக்ஷி
மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஏராளமான வீரர்களும், பொதுமக்களும் சேர்ந்து அவருக்கு
உணர்வு பூர்வ வரவேற்புக் கொடுத்தார்கள். குடும்ப உறுப்பினர்களைக் கண்டதும் வினேஷ் போகத்
கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். அவருக்கு பண மாலை போடப்பட்டது.
ஒரு தங்கப் பதக்கம் கிடைக்கவில்லை என்பது கவலையில்லை, வினேஷ் போகத்
எங்களுக்கு 50.100 கிலோ தங்கம் என்று எழுதி அவருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு கொடுத்து
அசத்தியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் அவர் நேற்று வெளியிட்ட உணர்வுபூர்வமான அறிக்கை பெரும்
வைரலாகி வருகிறது. அந்த அறிக்கையில் வினேஷ் போகத், “எனக்கு பேசுவதற்கு நிறைய உள்ளது.
ஆனால், அதற்கு வார்த்தைகள் போதுமானதாக இல்லை.
ஆகஸ்ட் 6-ஆம் தேதி இரவு மற்றும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலை நானும்
எனது அணியினரும் எங்களது முயற்சிகளைக் கைவிடவில்லை. நாங்கள் சாதிக்க நினைத்ததை எங்களால்
சாதிக்க முடியவில்லை. அது எப்போதும் ஒரு குறையாகவே இருக்கும். வேறு வகையான சூழ்நிலைகளில்,
நான் 2032 வரை விளையாடியிருக்கலாம் என நினைக்கிறேன். ஏனென்றால் எனக்குள் போராட்ட குணமும்
மல்யுத்தமும் எப்போதும் இருக்கும்.
எதிர்காலம் எனக்காக என்ன வைத்துள்ளது எனத் தெரியவில்லை. ஆனால்,
நான் எதை நம்புகிறேனோ அதற்காகவும் சரியான காரியத்துக்காகவும் நான் தொடர்ந்து போராடுவேன,”
என்றும் தெரிவித்திருக்கிறார்.
மக்கள் துணையுடன் நிச்சயம் போராட்டத்தில் வெற்றி பெறுவார் வினேஷ்
போகத்.