Share via:
ஜீவித்பத்ரிகா பண்டிகை நேற்று பீகாரில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. குழந்தைகளின் நலன்களுக்காக பெண்கள் விரதம் இருந்து கொண்டாடும் இந்த பண்டிகையின் இறுதியில் குளம், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் குழுக்களாக புனித நீராடுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த பண்டிகையின் போது பெண்கள் மற்றும் குழந்தைகள் பீகாரில் உள்ள கிழக்கு சம்பரான், மேற்கு சம்பரான், நாளந்தா, அவுரங்காபாத், கைமூர், பக்சார், சிவாசன், ரோத்தாஸ், சரண், பாட்னா, வைஷாலி, முசார்பூர், சமஸ்திபூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் புனித நீராடிய போது அவர்களில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக 37 குழந்தைகள் உயிரிழந்தது சோகத்தின் உச்சம். சடலமாக மீட்கப்பட்ட அவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
மேலும் புனிதநீராடியவர்களில் 3 பேர் காணாமல் போன நிலையில் அவர்களை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.