Share via:
விஜயகாந்த் மறைவுக்கு தமிழக அரசு மரியாதையும் பல்வேறு உதவிகளும்
கிடைத்தன. இந்த நிலையில் பிரதமர் மோடியிலிருந்து லோக்கல் அண்ணாமலை வரையிலும் பிரேமலதாவுக்கு
ஆறுதல் கூறிவந்தனர். இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து தி.மு.க.வுக்கு
எதிராக பிரேமலதா உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இணைய வேண்டும் என்றால்
தி.மு.க.வுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்பதாலே பிரேமலதா
இந்த முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘’சட்டமன்ற
உறுப்பினராக விஜயகாந்த் அரை நூற்றாண்டுக்கும் மேலாக வளர்ச்சியடையாத ரிஷிவந்தியம் தொகுதியில்
மக்களின் தேவைகள் அறிந்து அவர்கள் வைத்த கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றத் தொடங்கினார்.
சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், அங்கன்வாடி கட்டிடங்கள், நியாயவிலை கடைகள் என அடுக்கடுக்காக
மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றினார்.
மாடாம்பூண்டி கூட்ரோட்டில் ரௌண்டானா அமைக்க விஜயகாந்த் அமைத்துத்
தந்த நிழற்குடையை இடித்த அதிகாரிகள். மீண்டும் அருகாமையில் நிழற்குடையை கண்டிப்பாக
அமைத்து தருகிறோம் என உறுதியளித்தனர். ஆனால் இன்றுவரை அதை அமைத்துதரவில்லை.
இதேபோல மணலூர்பேட்டையில் விஜயகாந்த் அமைத்து தந்த பயணியர் நிழற்குடையை
மீண்டும் அமைத்துத் தருவதாக உறுதியளித்து இடித்தனர். அதையும் நிறைவேற்றவில்லை.
விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த போது
செய்த வியக்கத்தக்க மக்கள் பணிகளை மக்களிடம் இருந்து மறைக்கும் விதமாகவும், விஜயகாந்த்
அடையாளங்களை அழிக்கத் துடிக்கும் திமுகவினரையும், அவர்களுக்கு துணை போகும் அரசு அதிகாரிகளையும்
வன்மையாக கண்டிப்பதாகவும், இதை கண்டித்து வருகின்ற 20ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட
தேமுதிக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்’’ என்று பிரேமலதா அறிவித்துள்ளார்.
இந்த போராட்டத்தில் பிரேமலதா
கலந்துகொள்வதற்கு வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது என்றாலும், விஜயகாந்த் மறைந்து
30 நாட்கள் கூட ஆகாத நிலையில், அனுதாபத்தை பெறும் வகையில் இப்படி அறிவிப்பு செய்திருக்கிறார்
என்று சொந்தக் கட்சியினரே விமர்சனம் செய்துவருகிறார்கள்