Share via:
குருத்வாராவை கைப்பற்றுவதில் ஏற்பட்ட மோதலில் சீக்கியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு போலீஸ்காரர் உட்பட 3 பேர் பலியான சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் சீக்கியர்களின் புனித தலமான குருத்வார் அமைந்துள்ளது. இதனை கைப்பற்றுவதில் மோதல் ஏற்பட்டதால் நிஹாங் சீக்கியர் பிரிவைச் சேர்ந்த ஒரு நபர் திடீரென்று துப்பாக்கிசூடு நடத்தினார். இதில் ஒரு போலீஸ்காரர் ஒருவர் உட்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நிஹாங் பிரிவைச் சேர்ந்த 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பதற்றம் குறையாத நிலையில் அங்கு கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. மேலும் குருத்வாராவுக்குள் 30 பேர் வரை பதுங்கியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கை அமல்படுத்த முயற்சி செய்த போது நிஹாங் போராட்டக்காரர்கள் ஒரு போலீஸ் அதிகாரியின் கையை வெட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த வகை நிஹாங் சீக்கியர்கள் நீலநிற கயிறுடன் கூடிய அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகை அணிந்தபடி கைகளில் எப்போதும் கத்தி, ஈட்டி போன்ற ஆயுதங்களுடன் வலம் வருவார்கள் என்று கூறப்படுகிறது.