Share via:
வரும் 27ம் தேதி நடைபெற இருக்கும் விஜய் மாநாட்டுக்கு 234 தொகுதிகளுக்கும்
தற்காலிகப் பொறுப்பாளர்களாக 1638 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். ஏற்கெனவே பல்வேறு
குழுக்கள் நியமனம் செய்யப்பட்டதில் இதுவரை 2,500 பேருக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இன்னமும் வாலண்டியர்கள் 5,000 பேர் நியமிக்க இருப்பதாக சொல்லப்படுவதைக் கண்டு, மாநாட்டுக்கு
வரும் கூட்டத்தை சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில்
வெற்றிக் கொள்கைத் திருவிழா என்ற பெயரில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. காவல் துறையின்
கடுமையான கெடுபிடிகளுக்கு இடையில் இந்த மாநாடு நடைபெறுவதால், இதில் எந்தக் குளறுபடியும்
நடந்துவிடக் கூடாது என்பதில் விஜய் மிகவும் உறுதியாக இருக்கிறார்.
எனவே, சமீபத்தில் மாநாட்டு பந்தல் அமைப்பு தொடங்கி வழியனுப்பு
விழா வரையிலும் பல்வேறு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் சட்டமன்றத்
தொகுதி அளவில் மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்க மாவட்டத் தலைவர்கள் மற்றும் அணித் தலைவர்கள்
ஆகியோரின் வழிகாட்டுதலுடன் ஒருங்கிணைந்து செயல்பட 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிகப்
பொறுப்பாளர்களை விஜய் நியமனம் செய்திருக்கிறார்.
இவர்களைத் தவிர மேற்பார்வையாளர்களாக 5,000 பேர் நியமனம் செய்யப்பட
இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதுவரை தமிழகத்தின் பெரிய கட்சிகள் நடத்திய எந்த ஒரு
மாநாட்டிற்கும் இத்தனை பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டதில்லை. ஒட்டுமொத்த கணக்குப்படி
பார்த்தால் சுமார் 7,500 பேர் பொறுப்பாளர்களாக இருப்பார்கள் என்று தெரிகிறது.
இந்த 7500 பேரும் ஆளுக்கு 200 பேரை மாநாட்டுக்கு அழைத்து வந்தாலே
சமாளிக்க முடியாத அளவுக்கு 15 லட்சம் பேர் கூட்டமாக மாறிவிடும். இத்தனை கூட்டம் வந்தால்
உணவு வழங்கவும், கூட்ட நெரிசலை சமாளிக்கவும் சிக்கலாகிவிடும். அதோடு மழை வந்துவிட்டால்
இத்தனை கூட்டத்தில் இருந்து தப்பிக்க நினைத்து குழப்படி நடந்துவிடும் என்று எச்சரிக்கை
செய்கிறார்கள்.
எனவே, ஒரே மாநாட்டிற்கு அத்தனை பேரையும் அழைத்துவிடாமல் கட்டுப்பாட்டான
கூட்டத்தைக் காட்டுவதே விஜய்க்கு நல்லது என்று அவரது ரசிகர்கள் ஆதங்கம் தெரிவிக்கிறார்கள்.
விஜய் கவனிக்க வேண்டிய விஷயம் இது.

