Share via:
மின்சாரமின்றி தவிக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் காசாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி தொடங்கிய இஸ்ரேல்& ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான போர் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகள் என பாரபட்சமின்றி இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலால் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் காசாவை விட்டு வெளியேறிய நிலையில் எஞ்சியுள்ள மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
காசாவில் சீட்டுக்கட்டு போல சரிந்துள்ள இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த சடலங்களை மீட்க ஒரு பக்கம் மக்கள் போராடி வருகின்றனர். மருபுறம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நோயாளிகள் கடந்த 2 நாட்களாக மின்சாரமில்லாமல் காசா இருளில் மூழ்கியதால் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
கடந்த 3 நாட்களாக இஸ்ரேல் ராணுவம் காசாவில் இயங்கி வரும் அல்&ஷிஃபா மருத்துவமனையை தனக்கு கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறது. ஹமாஸ் படையைச் சேர்ந்தவர்கள் மருத்துவமனையில் பதுங்கி இருக்கிறார்களா என்ற கோணத்தில் அங்கு இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஹமாஸ் அமைப்பினர், பிறந்த குழந்தைகள், குழந்தைகள், பெண்கள் என ஆயிரக்கணக்கான நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இருளில் மூழ்கியுள்ள காசாவில் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறை காரணமாக கடந்த 2 நாட்களில் மட்டும் மொத்தம் 24 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது சர்வதேச நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச நாடுகள் கொடுத்து வரும் உதவிகளையும் காசாவுக்குள் நுழைய விடாமல் இஸ்ரேல் தடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. போரில் உயிரிழந்தவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் என்பதும், 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பதாகவும் ஏற்கனவே ஐ.நா. அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

