Share via:
இஸ்ரேலில் இருந்து 2வது விமானம் மூலம் 235 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் திரும்பினர். அவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இஸ்ரேல்& ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதம் ஒரு வாரத்தை தாண்டி நடந்து கொண்டிருக்கிறது. 3 ஆயிரத்துக்கும் மேல் கொல்லப்பட்டுள்ள நிலையில் காசாவில் கர்ப்பிணிகள், குழந்தைகள் என அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் காசாவில் இருந்து 10 லட்சம் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. காசாவில் தாக்குதல் நடத்தினால் பிணைக் கைதிகளை கொலை செய்வோம் என்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில் மத்திய அரசின் ‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்கள் படிப்படியாக மீட்கப்பட்டு வருகின்றனர். அதன்படி நேற்று (அக்.13) 212 இந்தியர்கள் முதல் விமானத்தில் மூலம் இந்தியா வந்தடைந்தனர். அதில் 14 தமிழர்கள் சென்னை வந்தடைந்தனர். இஸ்ரேலில் இருந்து உயிர் பிழைத்து வந்த அனைவருக்கும் அந்தந்த விமான நிலையங்களில் அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2வது விமானம் இன்று டெல்லி வந்தடைந்தது. அதில் 235 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதில் 28 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் துரிதமாக இந்தியாவுக்கு பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.