Share via:
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகப் பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
இதையடுத்து மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி நிறைவு பெற்றதை அடுத்து இணையதளத்தில்
மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் நிறைவு பெற்றன.
இந்நிலையில் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் அதன் இயக்குநர் சேதுராம
வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதன்படி, மொத்தம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு 94.03% விகிதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில் இந்த ஆண்டு
மொத்த தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவிகள் 96.44%, மாணவர்கள் 92.37% தேர்ச்சி
பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். பிளஸ்
2 பொதுத் தேர்வை எழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
* தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்களின்
எண்ணிக்கை 5603. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 5161. (92.11%)
* தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த
எண்ணிக்கை 125. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 115 (92%)
* இத்தேர்வில் 397 அரசுப் பள்ளிகள்
முழு தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக தேர்வு முடிவுகள் வெளியாகும் சமயத்தில் மாணவ, மாணவியர்
தவறான முடிவுகள் எடுப்பதுண்டு. அதனை தடுத்து நிறுத்தும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின்
உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இன்று காலை முதலே தெளிவான அறிக்கை வெளியிட்டு மாணவர்கள்
மற்றும் பெற்றோருக்கு ஆலோசனை தெரிவித்தார்கள். இது ஒரு நல்ல வரவேற்கத்தக்க முயற்சி.
இன்று முதல்வர் ஸ்டாலின், ‘’தேர்வு முடிவுகள் எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும்,
பெற்றோர்களும் உணர வேண்டும். தேர்ச்சி பெறாதவர்கள், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்களுக்கு
இன்னும் பல வாய்ப்புகளைக் காலம் வழங்கத்தான் போகிறது. இது உங்கள் வாழ்வின் தொடக்கம்
மட்டுமே. இனிதான் உங்களின் சிறப்பான phase அமையவுள்ளது என்ற positive outlook-உடன்
இந்தத் தேர்வு முடிவுகளை அணுகுங்கள். பெற்றோர்களும் பிள்ளைகள் மீது எந்த அழுத்தத்தையும்
ஏற்படுத்தாமல், அவர்களது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஒரு நல்ல நண்பனாகத் துணைநில்லுங்கள்!’’
என்று தெரிவித்திருக்கிறார்.
உண்மை தான். குறைவான மதிப்பெண் பெற்ற அல்லது தேர்ச்சி பெறாத மாணவர்கள்,
வாழ்வை புதிய நம்பிக்கையோடு எதிர்நோக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதை உணர்ந்து கொள்ள
வேண்டும். உலகம் மிகப் பெரியது. வாய்ப்புகள் கணக்கில்லாமல் இருக்கின்றன. துல்லியமான
திட்டமிடலோடு எதிர்காலத்தை நோக்கி அனைவரும் பயணிக்கலாம், வெற்றி பெறலாம்.

