Share via:
சீனாவில் தொடர்ந்து 18 மணிநேரம் வேலை பார்த்த உணவு டெலிவரி ஊழியர் பைக்கில் தூங்கியபடியே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
எட்டு எட்டாக மனித வாழ்க்கையை பிரிக்க வேண்டும் என்று பாட்ஷா திரைப்படத்தில் வருகிற வரிகளை இப்படியும் பயன்படுத்தலாம். அதாவது 8 மணி நேர வீட்டு வேலை, 8 மணி நேர அலுவலக வேலை கடைசி 8 மணிநேரம் உறக்கம் என்று எடுத்துக் கொள்ளலாம். இதில் ஒரு எட்டு குறைந்தாலும் அது மனிதனின் வாழ்க்கையை சீர்குலைத்துவிடும்.
ஆனால் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும், வேலைபளு காரணமாகவும் உறக்கத்தை பறிகொடுப்பவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாவதும், இறுதியில் உயிரையே விடுவதும் பல்வேறு இடங்களில் நடக்கிறது. அப்படி ஒரு சம்பவம் சீனாவில் நடந்துள்ளதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவில் உள்ள ஹாங்ஷோவில் யுவான் என்பவர் உணவு டெலிவரி வேலை செய்து வந்துள்ளார். ஆர்டர் கிங் என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவரின் வயது 55. இந்நிலையில் தொடர்ந்து 18 மணி நேரம் வேலை செய்த அவர் களைத்துப்போய் தன்னுடைய பைக்கிலேயே உறங்கியுள்ளார். அப்படியே அவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அந்த வீடியோவுக்கு பலர் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அவர் தன்னுடைய 55வயது வரை குடும்பத்தின் ஆதாரமாக விளங்கினார். இரவு பகல் பாராமல் உழைத்து வந்த அவர் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். அவர் இனி இதுபோன்று காலத்தை எதிர்த்து ஓட வேண்டியதில்லை என்று சோகமாக பதிவிட்டுள்ளனர். யுவானின் இந்த சோக முடிவு சீனாவில் டெலிவரி வேலை செய்பவர்களின் நலன் மற்றும் சட்ட உரிமைகள் பற்றிய விவாதத்தை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.