Share via:
விமானத்தில் திடீர் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதை கண்டறிந்து விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் 145 பயணிகள் உயிர் தப்பிய சம்பவம் சென்னை மீனம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை மீனம் பாக்கத்தில் இன்று (நவம்பர் 11) காலை 11.55 மணியளவில் சிங்கப்பூருக்கு செல்லக் கூடிய ஏர் இந்தியா விமானம் 145 பயணிகளுடன் பயணம் மேற்கொள்ள தயாராக இருந்தது. விமானம் புறப்படுவதற்கு முன்னதாக விமானி இறுதிக்கட்ட பரிசோதனை மேற்கொள்வது வழக்கம்.
அதன்படி விமானி இறுதிகட்டமாக பரிசோதனை மேற்கொண்டிருந்த போது, விமானத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தார். அதனை தொடர்ந்து விமானத்தை நிறுத்தி கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். அதன் பிறகு பொறியாளர்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் விரைந்து சென்று விமானத்தில் ஏற்பட்ட பெட்ரோல் கசிவு குறித்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியை மேற்கொண்டனர்.
இப்பணிகள் முடிவடைந்த பின்னர், 145 பயணிகளுடன் விமானம் மீண்டும் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. விமானியின் புத்திசாலித்தனத்தால் 145 பயணிகள் கடைசி விநாடியில் உயிர் தப்பிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.