Share via:
எழும்பூர், சென்டிரல் ரெயில்வே நிலையங்களில் இருந்து மொத்தம் 12 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீபாவளி பண்டிகை நாளை (நவம்பர் 11) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாடும் வகையில் பொது மக்கள் அவரவர் ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். விமானம், ரெயில், பேருந்து உள்ளிட்டவைகளில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அரசு பேருந்துகளை பொறுத்தவரையில் பொது மக்கள் வசதிக்காக சிறப்பு ரெயில்களும், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை எழும்பூர், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்கள் வாயிலாக கடந்த வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை (இன்று) ஆகிய 3 நாட்களில் மொத்தம் 12 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து 5 லட்சம் பேரும், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து 7 லட்சம் பேரும் பயணம் மேற்கொண்டுள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக பயணிகள் திருநெல்வேலி, தூத்துக்குடி, மங்களூரு, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.