Share via:
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பச்சிளங்குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் மாவட்டத்தில் சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு மருந்து பற்றாக்குறை நிலவுவதாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பெண் குழந்தைகள், 6 ஆண் குழந்தைகள் உள்பட 24 பேர் மருந்து பற்றாக்குறை காரணமாக உயிரிழந்துவிட்டதாக தெரிகிறது. பாம்புக்கடி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் மருந்து பற்றாக்குறை காரணமாகத்தான் உயிரிழந்தார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்வி எழுந்துள்ளன.
சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனை ஒரு மூன்றாம் நிலை பராமரிப்பு நிலையம் என்றும், அப்பகுதியில் உள்ள ஒரே சுகாதார மையம் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சில மையங்களில் நிறுவனத்தின் வரவு செலவுத் திட்டத்தை விட அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக மருத்துவமனையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், ஆனால் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மருத்துவமனை டீன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நோயாளிகள் உள்ளூர் கடைகளில் மருந்துகளை வாங்கி வந்த பின்னரே மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
