Share via:

பள்ளி மாணவ, மாணவியருக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் இன்றைய
தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதே சமூகநீதி
என்ற வகையில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய சில திட்டங்களை பார்க்கலாம்.
மதி இறுக்கம் எனப்படும் ஆட்டிசம் குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டுதல்
மையம், பள்ளிகள் கிடையாது. இந்த குறையை தீர்க்கும் வகையில் 25 கோடி ரூபாயில் உயர்திறன்
மையம் அமைக்கப்படுகிறது.
பழங்குடியின மாணவர்கள் 1,000 பேருக்குத் திறன் பயிற்சி வழங்குவதற்குத்
திட்டமிடப்பட்டுள்ளது. 7.5% உள் ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் படிப்புக்கான
முழுச் செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் பாலினத்தவர்களின் கல்லூரிப் படிப்புக்கான முழுச் செலவையும்
அரசே ஏற்றுக்கொள்ளும் திட்டம் அமலுக்கு வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்
வழியில் பயிலும் மாணவிகலுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு
370 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
பணிபுரியும் பெண்களுக்காக தோழி விடுதிகள் என்ற பெயரில் மகளிருக்கு
புதிய விடுதிகள் கட்டுவதற்கு 26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதோடு 1 லட்சம் மாணவர்களுக்கு
2,500 கோடி ரூபாய் கல்விக் கடன் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 100 கலை மற்றும் அறிவியல் பொறியியல்
கல்லூரிகளில் திறன் ஆய்வகங்கள் 200 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. மாற்றுத்
திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள் அமைக்கப்படுகிறது.
அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்குவதற்கு
முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் மாதத்தில் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட
உள்ளன.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில்
சேரும் மாணவர்களின் கல்வியை மெருகேற்ற தமிழ்ப் புதல்வன் என்ற திட்டம் தொடங்கப்பட்டு
மாணவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கும் கல்வித் துறைக்கும் செம பட்ஜெட் என்பதில் சந்தேகமே
இல்லை.