Share via:
பிரபல தொழில் அதிபர் என்ற அடையாளத்தையும் தாண்டி எளிமையான மனிதர், மனிதநேயமிக்க மனிதர் என்று பலராலும் புகழப்பட்டவர்தான் மறைந்த ரத்தன் டாடா. உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும் வயது மூப்பு காரணமாகவும் மும்பையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். அவரைப்பற்றி பலரும் அறிந்திராத சுவாரசியமான 10 தகவல்களை இங்கு பார்க்கலாம்.
1. டாடா குழுமத்தை நிறுவிய ஜம்செத்ஜி டாடாவின் பேரன் தான் ரத்தன் நவல் டாடா. இவர் மும்பையில் 1937ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி நவல் டாடா மற்றும் சுனி டாடா தம்பதிக்கு பிறந்தார்.
2. 1948ம் ஆண்டு நவல் டாடா மற்றும் சுனி டாடா பிரிந்த போது, அவரது பாட்டி நவாஜ்பாய் டாடாவால் வளர்க்கப்பட்டார்.
3. நான்கு முறை காதல், திருமணம் என்று செய்திகள் வந்தாலும், அவர் தன் கடைசி வாழ்நாள் வரை திருமணம் செய்துகொள்ளவில்லை.
4. 1962ம் ஆண்டு நடைபெற்ற இந்திய சீன போர் காரணமாக தனது முதல் காதலியை அவரது பெற்றோர் இந்தியா செல்ல அனுமதிக்காததால் அந்த காதல் பிரிவில் முடிந்ததாக ஒரு முறை ரத்தன் டாடா தெரிவித்தார்.
5. 1961ம் ஆண்டு சிறு சிறு பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட ரத்தன் டாடா, டாடா ஸ்டீல் நிறுவனத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்தார்.
6. 100 ஆண்டுகளாக முன்னோர்கள் கட்டிக்காப்பாற்றிய டாடா குழும நிறுவனத்தின் தலைவராக ரத்தன் டாடா 1991ம் ஆண்டு பொறுப்பேற்றார். 2012ம் ஆண்டு வரை அந்த பதவியில் நீடித்தார்.
7. டாடா நானோ மற்றும் டாடா இண்டிகா போன்ற பிரபல கார்களை உருவாக்கவும், வியாபாரத்தை விரிவாக்கம் செய்ததும் இவரின் முத்தாய்ப்பான நிர்வாகம் ஆகும்.
8. டாடா டீ நிறுவனத்தால் டெட்லியை, டாடா மோட்டார்களால் ஜாகுவார் லாண்ட் ரோவரை மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனத்தால் கொரசை 2004ல் தனது சொந்தமாக்கினார்.
9. ரூ.1 லட்சத்திற்கு டாடா நானோ காரை அறிமுகப்படுத்தி ஏழை, எளிய மக்களின் கனவை நனவாக்கினார்.
10. டாடா குழும நிறுவன தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய அவர், டாடா சன்ஸ், டாடா இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனங்களின் தலைவர் பதவியில் நீடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.