Share via:
இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான போரை தொடர்ந்து பாலஸ்தீனர்களை உடனடியாக வெளியேற்றும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பணியிடங்களுக்கு 1 லட்சம் பேர் பணியமர்த்தப்பட உள்ளதாக தெரிகிறது.
கடந்த மாதம் 7ம்தேதி இஸ்ரேல் நாட்டுக்கும்- ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் மூண்டது. இன்றளவும் கடுமையாக போர் நடந்து வரும் நிலையில் காசா மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தி ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று குவித்து வருகிறது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஐ.நா., போர் நிறுத்தத்தை கொண்டு வர வலியுறுத்தியும் இஸ்ரேல் ராணுவம் அதை ஏற்க மறுத்துவிட்டது. காசாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழந்த நிலையில் அதிகபட்சமாக உயிரிழந்தது குழந்தைகள் மற்றும் பெண்கள் என்று ஐ.நா. அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டது.
ஹமாசுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் நாட்டுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்தும், ஐ.நா. கொண்டு வந்த போர் நிறுத்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் புறக்கணித்தும் இஸ்ரேல் நாட்டுடன் சுமூகமான உறவை கொண்டுள்ளது.
அதன் விளைவாக இஸ்ரேலில் பணியாற்றி வரும் பாலஸ்தீனியர்களை வெளியேற்ற அந்நாடு முடிவு செய்துள்ளது. அதன்படி இஸ்ரேலில் பணியாற்றி வரும் 90 பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு அவர்களின் பணியிடங்களுக்கு இந்தியர்களை பணியமர்த்த இஸ்ரேல் நாடு முடிவு செய்துள்ளது.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து 1 லட்சம் இந்தியர்கள் இஸ்ரேல் நாட்டில் வேலை வாய்ப்பு பெற முடியும். இவர்கள் அனைவரும் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரியவந்துள்ளது.