Share via:
முதன்முறையாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கரூர் சம்பவத்தில்
விஜய் நடந்துகொண்ட விவகாரம் தொடர்பாக கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். இதுவரை அதிமுகவை
அடித்துவந்த தவெகவினர் இதற்கு பதில் அளிக்காமல் அமைதி காக்கிறார்கள்.
இபிஎஸ் கேள்விகளை திசை திருப்புவதற்காகவே, தேர்தல் அறிக்கை தயார்
செய்வது தொடர்பாக, பொதுமக்களின் கருத்துகளை கேட்க தவெக தேர்தல் அறிக்கை குழு
சுற்றுப்பயணம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.
நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ‘’விஜய்யை
டிஆர்பி ரேட்டுக்காக காட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்.
ரசிகர்கள் கூட்டம் வரத்தான் செய்யும். விஜய் சிறந்த நடிகர் என்பதில் எந்த மாற்றுக்
கருத்தும் இல்லை. ஆனால், சிறந்த அரசியல்வாதிகள் நாங்கள் தான். மக்களுக்கு சேவை செய்வதும்,
மக்களுக்குக் குரல் கொடுப்பதும் நாங்கள் தான். இந்த ஆட்சியை எதிர்த்துக் கூடப் பேச
முடியவில்லை அவருக்கு. இப்போதுதானே அரசியலுக்கு விஜய் வந்திருக்கிறார், நான் 1974 பொது
வாழ்க்கைக்கு வந்தேன். 51 ஆண்டுகாலம் ஆகிவிட்டது. மக்கள் பிரச்னையை அனுபவ ரீதியாக தெரிந்திருக்கிறோம்.
கரூரில் 41 உயிர்களை இழந்துவிட்டோம். யாருக்காக உயிர் இழந்தார்கள்,
அவருடைய பேச்சைக் கேட்க வந்த கூட்டம். என்ன செய்திருக்க வேண்டும்? நேரடியாக அங்கு சென்றிருக்க
வேண்டும், நாங்கள் எல்லாம் போகவில்லையா? இந்தக் கட்சி அந்தக் கட்சி என்றெல்லாம் பார்க்கவில்லை.
விலைமதிக்க முடியாத உயிர்கள் போய்விட்டது, அவர்களுக்கு ஆறுதல் சொல்லச் சென்றோம். இவர்
சென்று ஆறுதல் கூட சொல்ல முடியவில்லையே அப்புறம் கட்சி நடத்தி என்ன செய்யப் போகிறீர்கள்?
எதையுமே செய்யாமல் திரைப்படத்தில் இருக்கும்வரை சம்பாதித்தீர்கள்.
விட்டுவிட்டு வந்த பின்னர் பல்லாயிரக்கணக்கான கோடி விட்டு வந்தேன் என்கிறீர்கள். யாருக்காக
விட்டு வந்தீர்கள்? திட்டமிடாமல் போனதால் தான் 41 உயிர்களை நாம் பலி கொடுத்துவிட்டோம்.
41 குடும்பம் அனாதை ஆகிவிட்டது..’’ என்று கன்னாபின்னாவென்று பேசியிருக்கிறார்.
ஆனால், விஜய் டீம் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த பதிலும் சொல்லாமல்
அமைதியாக இருக்கிறார்கள். தேர்தல் அறிக்கை குழு, கட்சி ஆண்டுவிழா என்று பேசுகிறார்கள்.
அதிமுகவை தேவையில்லாமல் பகைத்துக்கொள்ள வேண்டாம் என்று தவெக தலைமை உத்தரவு போட்டிருக்கிறதாம்.
எதற்காக என்பதுதான் யாருக்கும் தெரியாத புதிர்.
