Share via:
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் ரசிகர்கள் எண்ணிக்கை
வெளிப்படையாகத் தெரியவேண்டும், மிகப்பெரும் கூட்டம் பனையூரில் கூட வேண்டும் என்று புஸ்ஸி
ஆனந்த் கொடுத்த அழைப்பு காரணமாகவே, எக்கச்சக்க ரசிகர்கள் பனையூரில் திரண்டு நின்று
அடிதடி சண்டை போட்டு விருப்பமனு வாங்கினார்கள்.
பனையூரில் தாங்கள் வாங்கிய விருப்பமனுவை பிளாக்கில் சிலர் விற்பனை
செய்த விவகாரம் பெரும் பஞ்சாயத்தைக் கிளப்பியிருக்கிறது.
இதுகுறித்து பேசும் அரசியல் ஆர்வலர்கள், ‘’புஸ்ஸி ஆனந்த் இதிலும்
கெத்துக்காட்ட மா.செக்களுக்கு ஆர்டர் போட்டு ஆட்களை வரச்சொல்லி இருக்கார். துண்டு பிரசுரம்
வாங்குவது போல், சினிமா டிக்கெட் வாங்குவதுபோல் ரூ.100 நிர்ணயித்து பல ஆயிரம் பேரை
வாங்கவைத்து மாஸ் காட்டலாம் என நினைத்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் வந்துவிழுந்த கூட்டத்தை பார்த்து பயந்து போய் விவரத்தை
வாங்காமல், ரூ.100 வாங்காமல் துண்டு பிரசுரம் போல் கொடுத்தனுப்பியுள்ளனர். கார், பைக்,
வேன் என நான்கைந்து தெருக்களை பிளாக் செய்து குடியிருப்புவாசிகளை துன்பப்படுத்தி இப்படி
ஒரு அலப்பறை செய்யவே குடியிருப்புவாசிகளும் கொதித்து எழுந்துவிட்டார்கள்.
நேற்றைய தினம் கொஞ்சநேரத்திலேயே மனு விற்பனை முடிந்துவிட்டதாக
அறிவிக்கப்பட்ட காரணத்தால், பலரும் தாங்கள் வாங்கியதை பிளாக்கில் விற்பனை செய்து பண்ம்
சம்பாதித்துள்ளனர், இவர்கள்தான் தூய்மையான ஆட்சி தரப்போகிறார்களா?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்த விவகாரம் சிக்கலாகவே இப்போது, ‘’கழகத் தலைமை நிலையச் செயலகம்
இருக்கும் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எவ்வித இட நெருக்கடியும்
ஏற்படக் கூடாது என்பதை முழுமையாகக் கவனத்தில் கொண்டுள்ளோம். எனவே, மக்கள் மீது அதிக
அக்கறை கொண்ட நம் வெற்றித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, விருப்ப மனுக்களைப்
பெறுவதற்காகக் கழகத் தோழர்கள் யாரும் தலைமை நிலையச் செயலகத்திற்கு வர வேண்டாம் என்று
அன்போடு கேட்டுக்கொள்கிறோம். எனவே, விருப்ப மனு பெற விரும்பும் கழகத் தோழர்கள், பின்வரும்
இணைப்பைப் பயன்படுத்திப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. https://drive.google.com/file/d/1Y9PfGCXvzVTbJ6B6S128PKJZE7laWgiK
இந்த இணைப்பின் வாயிலாக விருப்ப மனுவைப் பதிவிறக்கம் செய்யலாம். அதில் கேட்கப்பட்டுள்ள
விவரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும். இவற்றை ஏற்கெனவே
குறிப்பிட்ட தேதியான பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் நேரிலோ, கொரியர் / தபால் மூலமோ அனுப்பலாம்’’
என்று அறிவித்துவிட்டார்கள்.
தமிழகம் முழுக்க குறைந்தது 10 ஆயிரம் பேர் 10 ஆயிரம் ரூபாய் கட்டுவார்கள்
என்று எதிர்பார்க்கிரார்கள். அப்படி என்றால் இதன் மூலமே 10 கோடி ரூபாய் கல்லா கட்டுவதற்குத்
தயாராக இருக்கிறார்கள்.
