Share via:
பகுஜன் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரின் படுகொலை தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட திருவேங்கடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், மற்ற 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல இயக்குனரும், படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பருமான பா.ரஞ்சித் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நம் ஒவ்வொருவருக்கும் பேரிழப்பாகும். தலித்துகள், சமூக அரசியல் மற்றும் பொருளாதார விடுதலை அடைய இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கறது. அதில் அவர்கள் சந்தித்த இழப்புகள் எண்ணில் அடங்கா என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வருகிற சனிக்கிழமை (20ம்தேதி) பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் கே.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலைக்கு நீதி வேண்டி மதியம் 3 மணியளவில் சென்னை எழும்பூரில் நினைவேந்தல் பேரணி நடத்தப்படுகிறது. அனைத்து தலித் கூட்டமைப்பின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்வேறு சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் கலந்து கொள்ளும் எழுச்சிமிகு பேரணியில் ஆயிரம் ஆயிரமாய் அணி திரள்வோம் வாருங்கள். ஜெய்பீம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து வருகிற சனிக்கிழமை போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் நினைவேந்தல் பேரணி நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.