Share via:
தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பும் அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள தலைமை செயலாளர் உறுதியளித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதி வரும் நிலையில், பல மணிநேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசித்து வரும் தமிழக பக்தர்கள் 6 கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி கேரள ஐகோர்ட்டுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
அதில் நிலக்கல் முதல் பம்பை வரையிலான பகுதிகளில் பக்தர்கள் போலீசாரின் உதவியுடன் பேருந்துகளில் ஏற்றப்பட வேண்டும். அதேபோல் 80 பக்தர்களை மட்டுமே பேருந்தில் அனுமதிக்க வேண்டும். மேலும் குழந்தைகள் மற்றும் வயதான பெண்களுக்கென்று தனிவரிசை கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் தமிழ்நாட்டில் இருந்து சென்றுள்ள தமிழக ஐயப்ப பக்தர்கள் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்புன்றி சிரமப்படுவது குறித்து தகவல் கிடைத்தது. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, கேரள மாநில தலைமை செயலாளர் வி.வேணுவிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது தமிழ்நாட்டில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்புக்கான அனைத்து உதவிகளையும் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட கேரள மாநில தலைமை செயலாளர், தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு கேரளாவில் தக்க அடிப்படை வசதி செய்து கொடுக்கவும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் கேரள மாநில அரசு சார்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியுடன் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சென்றுள்ள ஐயப்ப பக்தர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
Copyright © 2023. All Rights Reserved.