Share via:

0 Shares

சினிமா இசை ரசிகர்களுக்கு ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு பிரிவு என்றால், அது இளையாராவும் வைரமுத்துவும் உறவை முறித்துக்கொண்ட நிகழ்வுதான். இதுகுறித்து இரண்டு பேரும் அதிகம் வெளிப்படையாகப் பேசுவதில்லை. ஆனால், ஏ.ஆர்.ரகுமானுடன் பணியாற்ற நேரந்த அனுபவம் குறித்து பேச நேர்கையில் இளையராஜா குறித்தும் பேசியிருக்கிறார் வைரமுத்து.

அவர் என்ன பேசியிருக்கிறார் என்று கேளுங்கள்.

இளையாராஜாவுடன் பணியாற்றிய முதல் ஆறாண்டு காலத்தை என்னால் மறக்கமுடியவில்லை. நெஞ்செல்லாம் நுரைகட்டிக் கிடந்த காலமது. வெற்றிபெற வேண்டுமென்ற வேட்கை உடம்பையும் மனதையும் உலுக்கிய காலமது. பாட்டுக்குள்ளிருக்கும் வணிகம் என்பது மறந்து, கலை மட்டுமே முன்னிலைப் படுத்தப் பட்ட பொற்காலமது.

முக்குளித்து வந்ததெல்லாம் முத்துக்கள்; தொட்டதெல்லாம் வெற்றி. முதல்மரியாதையை, சிந்துபைரவியை காதல் ஒவியத்தை இப்போது நினைத்துக் கொண்டாலும் கண்கள் கட்டிகட்டியாய் நீர் கொட்டுகின்றன. இளையராஜாவோடு நோ்ந்த பிரிவுக்கு எனது அறியாமையே காரணம் என்று நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்; அதிகப்படியான சுயமரியாதையும் ஒா் அறியாமைதானே !

இளையராஜாவின் பிரிவுக்கும் ஏ.ஆா் ரகுமானின் வரவுக்குமான ஆறாண்டு கால இடைவெளியை நிரப்புவதற்கு நான் பெரிதும் சிரமப்பட்டேன். என் தமிழ் சிங்கத்தின் பால் என்று நான் கருதிக்கொண்டாலும் அதை வாங்கி வைத்துக்கொள்ள தக்கதொரு தங்கப்பாத்திரம் இல்லை; அவ்வப்போது வாய்த்த வெள்ளி வெண்கலப் பாத்திரங்களில் மாற்றி ஊற்றி வைத்தேன். எம்.எஸ். விஸ்வநாதன்,சந்திரபோஸ், தேவேந்திரன் சங்கா்கணேஷ், மரகதமணி அம்சலேகா மற்றும் தேவாவோடும் பயணித்தேன். அந்த இடைக்காலத்தின் என் பாடல்கள் எண்ணிய உயரம் எய்தவில்லை; ஆயினும் என் தினவோ கனவோ குறையவில்லை.

அந்த இடைக்காலத்தில் நானுற்ற அவமானங்களும், ஏளனங்களையும் என்னதான் திண்ணிய உள்ளமிருந்தாலும் என்னைக் காயப்படுத்தவே செய்தன என எழுதியிருக்கிறார்.

பிரிந்தவர்கள் இணைந்தால் தமிழுக்கும் இசைக்கும் இன்னும் நிறையவே உயரங்கள் கிடைக்கும்.

Share via
Copy link