Share via:
வாரம் தோறும் பொதுமக்கள் குறை தீர் முகாமில் பெறப்படும் புகார் மனுக்கள் மீது விரைந்து விசாரணையும் நடவடிக்கையும் எடுக்குமாறு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக மூத்த குடிமக்களை காவல் நிலையத்திற்கு அலைய வைக்காமல், அவர்கள் வீட்டுக்கே நேரில் சென்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்த வகையில் இன்றைய தினம் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் பெறப்பட்ட மூத்த குடிமக்களின் புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டார். அதன்படி மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 84 வயதான சாம்பசிவம், சூளையச் சேர்ந்த 83 வயதான ராஜா பாதர் ஆகிய மூத்த குடிமக்களின் மனுக்கள் மீது தி.நகர் மற்றும் புளியந்தோப்பு காவல் துணை ஆணையாளர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.
வீடு தேடிச் சென்று குறை தீர்க்கும் வகையில் நான்கு மூத்த குடிமக்களின் பிரச்னைகளை போலீஸார் தீர்த்து வைத்துள்ளது தெரியவந்துள்ளது. அவற்றில் ஒருசில பிரச்னைகளை மட்டும் இங்கே கொடுத்திருக்கிறோம்.
வாடகை பஞ்சாயத்து
சாலிகிராமத்தைச் சேர்ந்த என்.கே.ரத்தினசபாபதி எனும் 81 வயது முதியவர் கொடுத்திருந்த மனுவின் அடிப்படையில் கோயம்பேடு துணை ஆணையாளர் உமையாள் அவரது வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். ரத்தினசபாபதியை ஏமாற்றி வீடு வாடகைக்கு எடுத்து, வாடகையும் கொடுக்காமல் தொந்தரவும் செய்துவந்த அருள்ராஜ் என்பவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வீட்டை காலி செய்வதற்கும் உரிய வாடகை கொடுப்பதற்கும் உறுதி கொடுத்திருக்கிறார்.
மகன் கொடுமை
அதேபோன்று, அடையாறைச் சேர்ந்த 70 வயது முதிய பெண்ணான காந்தா, தன்னுடைய வீட்டை எடுத்துக்கொண்ட மகன், தன்னை கவனிப்பதில்லை என்று புகார் கொடுத்திருந்தார். இதனை விசாரித்த அடையாறு துணை ஆணையாளர் பொன்.கார்த்திக்குமார், அந்த பெண்மணியின் மகன் கண்ணனிடம் விசாரணை மேற்கொண்டு, பிரச்னையை தீர்த்து வைத்திருக்கிறார்.
வீட்டுக்கு அடாவடி
ஆழ்வார் திருநகரில் வசித்துவரும் கபாலி என்ற 84 வயது முதியவர், மகனும் மருமகளும் வீட்டை எழுதித்தரும்படி கொடுமைப்படுத்துவதாக புகார் செய்திருந்தார். இதனை விசாரித்த கோயம்பேடு துணை ஆணையாளர் உமையாள், சமாதானம் செய்துவைத்து, கபாலிக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார்.
மரத்தால் பிரச்னை
அசோக்நகரில் வசிக்கும் 80 வயதான நாராயணன் என்பவருக்கு குடியிருப்பில் ஏற்பட்டிருந்த பிரச்னையை அடையாறு துணை ஆணையாளர் பொன்.கார்த்திக்குமார் தீர்த்து வைத்திருக்கிறார்.
இதுபோன்று மூத்த குடிமக்களின் பிரச்னைகளை தீர்த்து வைப்பதில் காவலர்கள் கரிசனமும் வேகமும் காட்டுவது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியும் காவல் துறை மீது நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோரின் அதிரடி நடவடிக்கைக்கு தமிழ் நியூஸ் நவ் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
Copyright © 2023. All Rights Reserved.