Share via:
மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர், சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த 38 வயதான குமார் என்பவர் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரராக திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 6 மாதங்களாக காமராஜர் துறைமுக ஸ்டேஷன் சிக்னல் பாயிண்ட் அருகே குமார் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் குமாரின் பணி நேரம் முடிந்ததால், அவரை தணிக்கை செய்ய உதவியாளர் ராஜூ அதிகாலை வந்துள்ளார். அப்போது இன்சாஸ் ரக துப்பாக்கியை கையில் பிடித்தபடி தலையில் ரத்த காயத்துடன் உயிரிழந்த நிலையில் இருந்த குமாரை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜூ உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மீஞ்சூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார், குமாரின் உடலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குமார் பணிச்சுமை காரணமாக உயிரிழந்தாரா? அல்லது குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினையா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகினறனர். பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Copyright © 2023. All Rights Reserved.